மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி…..!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மின்சாரத்தைத் திருடி அமைத்த மின்வேலியில் தம்பதியர் மற்றும் பசுமாடு சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்துள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஸ்வினி (26). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நேற்று மாலை (04) மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாட்டைத் தேடிக்கொண்டு தங்களது நிலத்துக்குச் சென்றனர்.

இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், உறவினர்கள் சிலர் இருவரையும் இன்று காலை தேடிச் சென்றபோது, விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில், கணவன் – மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் அருகில், பசுவும் இறந்து கிடந்தது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்பேரில், திருவலம் காவல்துறையினர் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இருவரும் பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தமை தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரைப் பிடித்து விசாரித்ததில், அவர் நிலத்துக்கு வந்து ஒரு வாரம் ஆனது தெரியவந்தது.தொடர் ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணை செய்ததில் , அவர் பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமாரின் நிலத்தின் வழியாக சட்டவிரோதமாக மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதிகள் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தமை அப்படுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.